நான் ரசித்த வரிகள்
📌💎📌💎📌💎📌💎
ஒரு ஞானி ஓர் ஊரில் தங்கி இருந்தார். அந்த ஊரைச் சேர்ந்த விவசாயி அவரது வீட்டுக்கு பின்னால் சுமார் இரண்டடி நீளமுள்ள ஒரு பாம்பை அடித்துக் கொன்றார். பின்னர் அவர் வீட்டிற்குள் சென்று தன் மனைவியிடம் நான், மூன்றடி நீளமுள்ள பாம்பை கொன்றேன் என்று சொன்னார்.
அதைக் கேட்டு அதிசயித்த மனைவி தன் பக்கத்துவீட்டுப் பெண்ணிடம் என் கணவர் சுமார் ஐந்தடி நீளமுள்ள பாம்பை தனி ஒருவராக அடித்துக் கொன்றார் தெரியுமா? என்று பெருமையாகச் சொன்னார். அந்த பெண்மணியோ, தன் பக்கத்து தெருவில் உள்ள தோழியிடம் எங்கள் தெருவில் ஒருவர், சுமார் பத்தடி நீளமுள்ள பாம்பை தனி ஒருவராக அடித்துக் கொன்றார் என்று கூறினார்.
அதனைக் கேட்ட அத்தோழி எங்கள் ஊரில் ஒருவர் முப்பதடி பாம்பை சாகடித்திருக்கிறார் என்று தம்பட்டம் அடித்துக் கொண்டார். இதை எல்லாம் கவனித்துக் கொண்டிருந்த ஞானி *மிகைபடுத்துவதால், கற்பனைத்திறன் வேண்டுமானால் வளருமே தவிர,* உண்மை இருக்குமிடம் தெரியாமல் போய்விடும் என்று ஊர் மக்களுக்கு அறிவுறுத்தினார்.
அதைக்கேட்ட விவசாயி தான் இரண்டை மூன்றாக்கியது, இப்போது முப்பதாகிவிட்டதை அறிந்தான். ஆனாலும், முப்பதடி பாம்பைக்கொன்ற பெருமை யையும் விட்டுக்கொடுக்க அவனுக்கு மனமில்லை. தன் வீரம் பற்றி, புதிதாக வந்திருக்கும் ஞானிக்கு என்ன தெரியும்? என்று அலட்சியமாக கேட்டான். உடனே, ஞானி விவசாயின் ஐந்து வயது மகனை அழைத்தார். உன் அப்பா, முப்பதடி பாம்பை கொன்றாரா? என்று கேட்டார். ஆனால், அவனோ அவரை அதிசயமாக பார்த்து விட்டு, *செத்த பாம்பு, வளருமா?* என்று கேட்டான்.
அதை கேட்டு ஞானி பெரிதாக சிரித்தார். தனது தந்தையார், பாம்பை கொன்றதாக சொன்ன போது ஓடிப்போய் பார்த்திருக்கிறான். அது வெறும் இரண்டடி பாம்புதான் என்பதும் அவனுக்குத் தெரிந்திருக்கிறது.
*அந்தப் பையனைப் போல, எல்லோரும் உண்மையை ஆராய்ந்ருந்தால், வதந்தியை பரப்ப நேர்ந்திருக்காது இல்லையா..?* என்று அவர் ஊர் மக்களை பார்த்து கேட்டார். மக்கள் அனைவரும் தலைகுனிந்து கொண்டனர்.
*இன்று ஊரும், செய்திகளும் அப்படித்தான் உலா வருகிறது. ஈரை பேனாக்கி, பேனை பெருச்சாளியாக்கும் உலகமிது.* ஆகையால்.. எதையும் ஆராயாமல் பரப்ப வேண்டாம்.
*நல்லவையே படிப்போம், நல்லவையே பரப்புவோம்.*
Comments
Post a Comment